காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் ராஜிவ் காந்தியை குறித்து சர்ச்சையாக டிக்டாக் வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர் துரைமுருகன் மீது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் துரைமுருகன் மீது தேசவிரோத நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை இயக்குநரிடம் காங். நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களையும், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களையும் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் நின்று கொண்டு, நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரை முருகன் என்பவர், டிக்டாக் செயலி மூலம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது குறித்து, அவர் மீது தேசவிரோத நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதியை இன்று (3.3.2020) பகல் 12.30 மணிக்கு நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். புகார் மனுவினை பெற்றுக் கொண்ட காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில நிர்வாகிகள் ஆர். தாமோதரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் உ. பலராமன், கீழானூர் ராஜேந்திரன், ஜி.கே. தாஸ், எஸ்.எம். இதாயத்துல்லா, வழக்கறிஞர் எஸ்.கே. நவாஸ் ஆகியோர் புகார் அளிக்கும்போது உடனிருந்தனர்.