முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிவருகிறது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில், எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் தனித்தனியே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே கடந்த 8ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்திலிருந்து கட்சிகளுடன் விவசாயிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுங்கட்சியான திமுகவையும், கேரள அரசையும் கண்டித்துப் பேசினார். உளவுத்துறை மூலம் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டனர் என்ற ரிப்போர்ட்டும் அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிளான மக்கள் கலந்துகொண்டது தேனி மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதேபோல் மறுநாள் 9ஆம் தேதி அதிமுக சார்பில் கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். முன்னிலைப்படுத்தி நடத்துகிறார் என்பதால் அதிக அளவில் கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும் திரட்ட வேண்டும் என்று அதிமுக முடிவு செய்து, தலைக்கு இருநூறு ரூபாயும், பிரியாணியும் கொடுத்து கூட்டத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றியம், கிளை பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டி வாகனங்களில் அதிகளவு மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால், கம்பத்தில் ஓ.பி.எஸ். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாமல் போனது.
பாஜகவின் கூட்டத்தைவிட, ஓ.பி.எஸ். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதுபோல் ஓ.பி.எஸ்.-ம் கூட அண்ணாமலை போல் காரசாரமாக பேசாமல், முல்லைப் பெரியாறு உருவாகிய வரலாறு பற்றி பேசிவிட்டு, 15 வருடம் போராடி 142 அடி தண்ணீரை தேக்கி வைத்தோம். அந்த உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என ஒருசில விஷயங்களை மட்டும் பேசிவிட்டு லோயர் கேம்ப் சென்று, அங்கு உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் இருக்கும் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “இதுவரை ஓ.பி.எஸ். பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்ததில்லை. சிலைக்கு முன்பாக அவர் படத்தை வைத்து அதில்தான் மாலை அணிவித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார். அதேபோல் முல்லை பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு வந்திருந்த அமைச்சர் துரைமுருகனின் கேள்விக்கு, ‘நான் 14 முறை முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று 5 மாவட்ட விவசாயிகளுக்காக தண்ணீரை திறந்துவிட்டேன்’ என்றார். அதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வருவதைக் கண்ட ஓ.பி.எஸ்., பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது பெரியாறு அணைக்குச் சென்றுவந்த புகைப்படத்தை வெளியிட்டு பெரியாறு அணைக்கு போய் வந்தேன் என்றிருக்கிறாரே தவிர, முல்லைப் பெரியாறு விஷயத்தை ஓ.பி.எஸ். சரிவர கையாளவில்லை’ என்கின்றனர்.