காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் வரிகொடா இயக்கம் சார்பில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின்போது டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டது இது தொடர்பாக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 14 பேர்கள் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வேல்முருகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் அவர்கள் முன்னிலையில் வேல்முருகன் உள்ளிட்ட 8 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மீண்டும் ஜனவரி 5ஆம் தேதிக்கு அனைவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, டோல்கேட் சேதப்படுத்தியதாக என் மீது திட்டமிட்டுப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அதன் காரணமாக காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டத்தின் துணை கொண்டு இந்த வழக்குகளிலிருந்து நான் உட்பட அனைவரும் நிரபராதி என விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் தற்போது கந்து வட்டி மீட்டர் வட்டி காரணமாக அப்பாவி மக்கள், குடும்பம் குடும்பமாக உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. விவசாயக் கடன்கள் வசூலிக்க வெளி நபர்களைக் கொண்டு விவசாயிகளை மிரட்டி வசூலித்து வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையான ஒன்றாகும். இதுபோன்ற கந்து வட்டி மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.