வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரியும் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் கிடைத்த இடங்களை வெளியிடக்கோரியும் அனைத்து கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் அறப்போராட்டம் நடத்தி நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பா.ம.க.வின் மாநில துணைத்தலைவர் சாம்பால் தலைமையில் சென்னை அயனாவரம் வாட்டர் டேங்க் அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில துணைத் தலைவர் சாம்பால், “இன்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம். இதிலும் எந்த பலனும் இல்லை என்றால், அடுத்ததாக வரும் 23ஆம் தேதி தாஸில்தாரரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்” என்றார்.