வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சிகள் தொடங்க ஆரம்பித்துவிட்டது. அனைத்துக் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளையும் அழைத்து, தொகுதி தேர்தல் அதிகாரிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விறுவிறுப்பா கூட்டங்களை நடத்திட்டு இருக்காங்க. அதில் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்துக்கும் பூத் ஏஜண்டுகள், அதிகாரிகளின் அடாவடிகளையும் குளறுபடிகளையும் கண்டிச்சி குரல் எழுப்பிருக்காங்க. இது எல்லாப் பக்கமும் தொடருது. உதாரணத்துக்கு மத்திய சென்னை தேர்தல் அதிகாரியான ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ், செனாய் நகர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் போட்டார். அப்ப, வாக்கு எண்ணும் நாளின் போது, முதல் ஒரு மணி நேரம் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்ன்னு அவர் சொன்னதும், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஓட்டே கொடுக்கப்படலை.
இது ஜனநாயக விரோதச் செயல்ன்னு பூத் ஏஜெண்டுகள் எல்லோரும் குரல் எழுப்பினாங்க. விசாரிக்கிறேன்னு அதிகாரி சொன்னார். அடுத்து ஏஜெண்டுகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை எடுத்துக்கிட்டு வரக்கூடாது. இங்கு ஒவ்வொரு ரவுண்டும் எண்ணிமுடித்து கவுண்டிங் தெரிவிக்கப்படும்போது, அதை வெளியே யாரும் பாஸ் பண்ணக் கூடாது. தேர்தல் அதிகாரியின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் எண்ணிக்கையை வெளிப்படுத்தணும்னு ஸ்ரீதர் சொன்னார். தி.மு.க. ஏஜெண்ட்டுகளோ, நாங்கள் செல்போன் கொண்டுவரக் கூடாதுன்னா அதிகாரிகள் தொடங்கி, காவல்துறையினர் வரை யாரும் அங்கே செல்போனைக் கொண்டு வரக்கூடாது. அதுக்கு சம்மதமான்னு கேட்டாங்க. திணறிப்போன அதிகாரி, அதிகாரிகளுக்கும் இதுபற்றி அறிவுறுத்தப்படும்னு நழுவினாராம். பெரும்பாலான கூட்டங்களில் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருப்பதால் அதிகாரிகள் என்னசெய்வது என்று யோசித்து கொண்டு இருக்காங்களாம்.