இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே பாஜக தரப்பில் இருந்து ‘இந்தியா’ எனும் பெயர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே கடும் அமளியால் அவைகள் முடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா எனும் பெயரை மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “ஆட்சி செய்ய விரும்புபவர்கள், நாட்டை உடைத்த கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்தியன் முஜாய்தீன் உள்ளிட்டவற்றில் உள்ள பெயரைக் கொண்டுள்ளனர். மக்கள் ஒரு போதும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ரமேஷ் பிதுரி எம்.பி தெரிவித்துள்ளார்.