சென்னையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிஜேபி சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜாவும், புதிய நீதிக்கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகள் தேமுதிக, பாமக, புதிய தமிழகம், த.மா.கா. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், நிகழ்ச்சியில் ஒருவித இறுக்கம் நிலவியது.
அதிமுக தொகுதிப் பட்டியலை முதலில் சேலத்திலிருந்து (இபிஎஸ்சின் ஊரான எடப்பாடி இந்த தொகுதியில்தான் இருக்கிறது) ஆரம்பித்த ஓபிஎஸ், தென்சென்னையில் முடித்தார். அப்போது, கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் கப்சிப் என்று அமைதியாக இருந்தனர்.
அதனால்,"கை தட்டுங்கப்பா.." என்று கூறி கலகலப்பூட்டினார் ஓபிஎஸ். அதற்குப் பிறகுதான், சரி கை தட்டி வைப்போம் என கடமைக்குக் கை தட்டினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
பின்னர், பாமக, தேமுதிக, பிஜேபி உள்ளிட்ட இதர கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
"ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தம் போடாத கட்சிகள் தான், இன்றைய கூட்டத்திற்கு வந்ததாக" விளக்கம் அளித்தார்.
இன்னமும் தாமரை இலைத் தண்ணீர் போல இருக்கின்றனவோ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள்?