பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட வேண்டுமென்று கருணாஸுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவுரை கூறியுள்ளார்.
எய்தவன் இருக்க அம்பு மீது குறை சொல்லி என்ன பயன்?. திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் ஜாதி ரீதியான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். நண்பர் கருணாஸ் அவர்களுக்குத் தெரியாதது அல்ல. அரசில் பணியாற்றுகின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதை மறுத்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவது உறுதி. இதுதான் நடைமுறையாக நடந்து கொண்டிருக்கிறது.
நண்பர் கருணாஸ் அவர்களுடைய கூட்டணி கட்சியினுடைய ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகார மையத்தில் இருப்பவர்களைக் குற்றம் சாட்டுவதை ஏதோ காரணங்களுக்காக தவிர்த்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜாதி ரீதியாகச் சுமத்தப்பட்டு இருக்கின்ற அவருடைய குற்றச்சாட்டு முன்னுதாரணமாக ஆகிவிடும். இதுபோல குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொதுவாக வைக்காமல் குறிப்பிட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி வைத்தால் நன்றாக இருக்கும்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்களும் உணர்ச்சிவயப்பட்டு பேசக்கூடியவர் தான். தமிழக முதலமைச்சர் மேல் குற்றச்சாட்டு வைத்து அவரை கொச்சைப்படுத்தி பேசியபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. அதனால் வருகின்ற காலத்தில் இதுபோன்ற பொத்தாம் பொதுவான ஜாதி குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து செய்த தவறை வெளிப்படையாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எல்லா சமூகங்களுக்கும் இன்றைக்கு அமைப்பு இருக்கிறது. எல்லாவற்றிலும் எழுச்சிமிகு இளைஞர்கள் அவரவர் சமூகத்திற்கு ஆதரவாக நிற்பவர்கள் உள்ளார்கள் என்பதைச் சமூக வலைத்தளங்களில் பார்த்தால் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
இரு ஜாதிகளுக்கு இடையே உள்ள பிரச்சினையாக இது மாறி விடக்கூடாது. ஜாதி கலவரங்கள் இப்படிப்பட்ட சிறு பொறியில் தான் ஆரம்பிக்கும் என்பதை உணர்ந்து பொறுப்புள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.