![mk Stalin's answer to ungkalil oruvan](http://image.nakkheeran.in/cdn/farfuture/r1TEFnMLTc6FmctUqAiPnoGjNGrnwkjvK2Gp3j1ZDRo/1675190329/sites/default/files/inline-images/766_3.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தினுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வர், “இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவு எதிர்பாராதது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு. நான் ஈரோட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது, இளங்கோவனின் மனநிலையைப் பார்த்து கலங்கினேன். அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈ.வெ.ரா மறைந்து அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது.
இத்தகைய சூழலில் கணத்த இதயத்தோடுதான் ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார். எப்படி இருந்தாலும் இது தேர்தல் களம். இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.கழக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலுமே தி.மு.கழகக் கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி!” எனக் கூறியுள்ளார்.