Skip to main content

40, 50, 500 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெற்றி இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்களா? மு.க.ஸ்டாலின் கேள்வி 

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன் எழுதிய “வாழ்வும் பணியும்” புத்தக வெளியீட்டுவிழா ஒரு தனியார் மண்டபத்தில் 05.09.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் மு.கண்ணப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், அண்மையில் வேலூர் தொகுதியில் நாம் பெற்ற வெற்றி என்பதுகூட அது வெற்றி இல்லையாம்! தோல்வி அடைந்தவர்கள் தோல்வி பெறவில்லையாம்!!
 

அதற்கு என்ன காரணம் சொல்கின்றார்கள் என்றால், இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் ஏற்கனவே, நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஆனால், ஏறக்குறையா 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள், என்கின்றார்கள்!
 

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் வெற்றி வெற்றிதான். அதையாரும் மாற்ற முடியாது.
 

நான் இன்னும் கேட்கின்றேன் புதுவையை சேர்த்து 40 தொகுதிகளில், 39 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம். எனவே, 40க்கு 1 பெரியதா? 40க்கு 39 பெரியதா?
 

இந்த சராசரி அறிவுகூட இன்றைக்கு ஒரு சிலருக்கு இல்லையே என்ற அந்த வருத்தம்தான், இன்றைக்கு நம்மை கேள்வி கேட்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

 

mkstalin


 

தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜ.க.,வும் மாநிலத்தில் இருக்கும் அ.தி.மு.க.,வும் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கிறார்கள்.
 

எனவே, ஆளும் கட்சிகள் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து, இந்தக் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், அது உள்ளபடியே ஒரு மிகப்பெரிய வெற்றி! அதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.


 

8,000 வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிப் பெற்றாலும் அது மிகப்பெரிய வெற்றி தான்!
 

நான் இன்னமும் சொல்கின்றேன்,அது வெற்றி அல்ல - வெற்றி அல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் 2016-ல் 1.1 சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சிப்பொறுப்பிற்கு நீங்கள் வந்தீர்கள்.
 

எனவே, 1.1 சதவிகிதம் வித்தியாசம் தானே என்று, 'நாங்கள் ஆட்சியில் இருக்க மாட்டோம்', என்று சொல்லி ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றீர்களா? ஆட்சியில் தானே இருக்கின்றீர்கள்!
 

நாங்கள் அதை மறுக்க வில்லையே.

 

mafa pandiarajan


 

இன்னமும் சொல்கின்றேன். ஏறக்குறைய 20 இடங்களில் இன்றைக்கு சிலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பாண்டியராஜனாக இருந்தாலும், துரைக்கண்ணுவாக இருந்தாலும், கோவில்பட்டி தொகுதியாக இருந்தாலும், இராதாபுரம் தொகுதியாக இருந்தாலும், 40 ஓட்டு, 50 ஓட்டு, 500 ஓட்டு, 2000 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று அமைச்சர்களே இன்றைக்கு இருக்கின்றீர்கள். 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெற்றி இல்லை என்றால், 40 - 50 - 500 - 2000 போன்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எல்லாம் வெற்றி இல்லை என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

 

duraikannu


 

அப்படி ஒத்துக் கொண்டால் ஆட்சியிலேயே நீங்கள் இருக்கக்கூடாது. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.
 

எனவே, நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது, உள்ளபடியே என்னைப் பொறுத்தவரையில் நாம் ஆட்சிக்கு வராமல் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை தான் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. இடைத்தேர்தல் நடைபெற்றது, அதில் முழுமையாக நாம் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சிக்கு வந்திருப்போம். ஆனால் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன நிலை என்று தெரியுமா?


 

இப்போது என்ன நடக்கிறதோ அதை தான் நாமும் செய்யவேண்டும். அப்படி நாமும் செய்கிறபோது அடுத்த முறை தேர்தலில் பிரச்சாரத்திற்கு மக்களிடத்தில் செல்ல முடியாது. எந்த திட்டங்களையும் முறையாக நாம் செய்ய முடியாது. எனவே முறையாக தேர்தல் வருகிறபோது, அதில் பெரும்பான்மையை விட இன்னும் அதிகமான அளவிற்கு,
 

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் 1971ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்தோமோ, அதேபோல், 184 அல்ல, 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றிப் பெற்று நாம் ஆட்சிக்கு வருகின்றபோது இன்னும் 25 வருடத்திற்கு இந்த தி.மு.கழக ஆட்சியை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்ற அந்த நிலையில் நாம் ஆட்சி நடத்துவோம். இவ்வாறு பேசினார்.


 


 

சார்ந்த செய்திகள்