தமிழகத்துக்கான அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள கடந்த சில மாதங்களாகவே தி.மு.க தயாராகி வருகிறது. இதற்காக, தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் முகமாக, மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை இரு மாதங்களுக்கு முன்பே தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (28-10-24) சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்,முகவர்களுடன் தொடர்பில் இருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது, அரசு சார்ந்த நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது, சட்டமன்றத் தேர்தல் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளப் பதிவுகளை கண்காணிப்பது ஆகியவை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேர்தலுக்காக கடுமையாக பணியாற்ற வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மக்களிடம் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது. பூத் முகவர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். புதுப்புது பாணிகளைக் கையில் எடுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டும். வெற்றி பெற எப்போதும் உழைக்க வேண்டும், எப்போதும் செயல்பட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தான் வெற்றிப் பெற போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை. திமுக அரசின் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் நம் இலக்கு, அதற்கான உழைப்பை நீங்கள் இன்றிலிருந்தே தொடங்கியாக வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதியை முழுமையாக தயார்படுத்த வேண்டும். இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.