
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு யூனியன்களிலும் அதுபோல் ஒட்டன்சத்திரம் டவுன் பகுதிகளில் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் உள்ள கருவூல காலனி, சம்சுதீன்காலனி, ஆர்எஸ்பிநகர், கேகே நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், ஏபிபிநகர், சத்யாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தும்மிச்சம்பட்டி, திருவள்ளுவர் சாலை ,நல்லாக்கவுண்டன் நகர், சாஸ்தா நகர், காந்தி நகர் உள்பட 18 வார்டுகளிலும் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்தவெளி ஜீப்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வெள்ளைச்சாமி, நகர்மன்றத் தலைவர் திருமலைசாமி, பூத் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் நகர்மன்றத்தலைவர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.பாலு, இளைஞரணி துணைஅமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும்,கவுன்சிலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது அங்கங்கே நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பம் ஆராத்தி தட்டுடன் வேட்பாளரையும், அமைச்சரையும் வரவேற்றனர். அதோடு மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது 13வது வார்டான தும்மிச்சம்பட்டி புதூரைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியான செல்வி தான் தனியார் காலேஜில் படிப்பை முடித்துவிட்டேன். ஆனால் அந்த கல்லூரியில் நான் பீஸ் கட்டாததால் என்னுடைய சான்றிதழை தர மறுக்கிறார்கள். அதனால் நான் வேலைக்கு போகமுடியாமல் தவிக்கிறேன். எனக்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றுகேட்டார்.

உடனே அமைச்சர் சக்கரபாணியும் கல்லூரி பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் என்று கேட்டார். அந்த மாணவி தொகையைச் சொன்னதும் நானே கட்டிவிடுகிறேன் என்றார்.
அதைக்கேட்டு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி அமைச்சரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைச்சர் சக்கரபாணி அப்பகுதியில் பேசும்போது, "இந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தமிழக முதல்வர் மூன்று கல்லூரிகளை கொடுத்து இருக்கிறார். அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் போகும் வழியில் ஐஏஎஸ்-ஐபிஎஸ்க்கான பயிற்சி மையமும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டும் வருகிறது. விருப்பாச்சியில் தொழிற்பயிற்சி நிலையமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நூறு கோடி செலவில் கரூரில் இருந்து காவேரி தண்ணீர் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் தொகுதி முழுக்கவே கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது.
கூடிய விரைவில் அந்தபணிகள் நிறைவடையும். அதன்மூலம் தொகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் அளவுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மகளிர் உரிமைத்தொகையும் தொகுதி முழுவதும் கொடுத்து இருக்கிறோம். இதில் விடுபட்டு போய் இருந்தால் அவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் முழுமையாக கொடுக்கப்படும். நமது கூட்டணி வேட்பாளரான சச்சிதானந்தம் உள்ளூர்காரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடியவர். மற்ற கட்சி வேட்பாளர் போல் வெளியூர்காரர் இல்லை. அதனால் உங்கள் வாக்குகளை அரிவாள் சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார்.