ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 20 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெராவை 9000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். நம்மிடம் இருந்து இயற்கை அவரை பிரித்து விட்டது. தற்போது, மகன் விட்டுச் சென்ற பணியைத் தொடர அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் கருணாநிதியின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனவே, இம்முறை ஈவிகேஎஸ் இளங்கோவனை பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க எனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 இன்னும் அதிகபட்சமாக 5 மாதத்திற்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார்” என்றார்.
அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ரூ. 1000 வழக்கப்படும் என பொய்யான வாக்குறுதியை அளித்து தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றுவிட்டார்கள் என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி இன்னும் 5 மாதத்திற்குள் உரிமைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.