திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டம் சார்பில் விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார், “கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து, இன்று விருதுநகர் மாவட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். விருதுநகர் மாவட்டம், வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம். நிறைய சுதந்திரப் போராட்ட வீரர்களை, விளையாட்டு வீரர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய மாவட்டமாகும். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு நமது இளைஞரணி.
கழகத்தில் 22 அணிகள் இருந்தாலும், முதல் அணியாக இளைஞர் அணி விளங்குகிறது. கழகத் தலைவர் இளைஞர் அணியைத் தொடங்கி, படிப்படியாக பொறுப்புகள் வகித்து, உழைத்து முன்னேறி முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். மதுரையில் ஒரு மாநாடு எப்படி நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நமது இளைஞர் அணியினர் நடத்தும் மாநாடு இந்தியாவிற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் கிராமப்புற மாணவர்கள் மருத்துவராகலாம் என்ற நிலையை உருவாக்கியவர், முத்தமிழறிஞர் கலைஞர். இதுவரை 22 பேரை இழந்திருக்கிறோம்.
இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம், தொடர்ந்து நீட் விலக்கு வேண்டுமென சட்ட போராட்டம் நடத்தினோம். இப்படி திராவிட மாடல் அரசும், திமுகவும் தொடர்ந்து போராடி வருகிறது. இதை மக்கள் போராட்டமாக மாற்றுவதற்காகவே நாம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதில் நீங்கள் மட்டும் கையொப்பம் இடுவதோடு நிற்காமல், உங்கள் குடும்பத்தார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் நீட் தேர்வு நிலையை எடுத்துக்கூறி, கையொப்பமிடச் செய்யவேண்டும். எடப்பாடி அவர்களே, இதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து நீட் விலக்கினைப் பெறுவோம். இதற்காக கிடைக்கும் அனைத்து பாராட்டுகளையும், பெருமையையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
ஆம் தமிழ்நாடு முழுவதும் எங்கள் குடும்பம்தான். மோடி அரசில் அதானியின் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வருகிறது என்ற விமர்சனம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதற்கு, இதுவரைக்கும் மோடி பதிலளிக்கவில்லை. மோடி சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்றை மட்டும் நிறைவேற்றியுள்ளார். நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று கூறினார். இப்போது இந்தியா என்ற பெயரை மாற்றியிருக்கிறார். சிஏஜி அறிக்கையின்படி, மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.” எனப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.