பாஜக அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேறினார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "திராவிட கொள்கை, பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் எங்கள் கட்சியில் தலைவர் ஸ்டாலின் சேர்த்துக்கொள்வார்" எனத் தெரிவித்துள்ளார்.