திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில். கட்சியில் மகளிரணி பிரிவிலும் நிர்வாகியாக உள்ளார். தற்போது வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபில் பெயர் இல்லாதது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக ஆலங்காயம் மேற்கு ஒ.செ செந்தில்குமார் என்கிற இளைஞர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் பேசியபோது, ஒரு உறையில் இரண்டு கத்தி என்பது போல் ஒரே மாவட்டத்தில் அதுவும் பக்கத்து பக்கத்து தொகுதியைச் சேர்ந்த வீரமணி, நிலோபர் என இருவரை, ஜெயலலிதா அப்போது தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அவர் மறைந்து கட்சிக்குள் சண்டை வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிலோபர் நின்றார். கட்சியின் மா.செவும், அமைச்சருமான வீரமணி ஓ.பி.எஸ் பக்கம் நின்றார். ஓ.பி.எஸ் வெளியேறி பிரச்சனை செய்தபோது, வீரமணி, இ.பி.எஸ் பக்கம் சென்றார். அவரின் கை அங்கு ஓங்கியதும், நிலோபர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றார்.
அதோடு நீங்களும் அமைச்சர், நானும் அமைச்சர் உங்களை எதுக்கு நான் மதிக்கனும் என நிலோபர், வீரமணியை மதிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் வந்து அவர் வாணியம்பாடி தொகுதியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். தற்போது தேர்தலில் அவருக்கு சிட் வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரிடமும் காய் நகர்த்தி நிலோபரை ஓரம் கட்ட வைத்து, சீட் இல்லாமல் செய்துவிட்டார் என்கிறார்கள் கட்சியினர்.
இந்தம்மாவும் கட்சியினரை மதித்ததே இல்லை. தனது மகன், மருமகனுக்கு முக்கியத்துவம் தந்து அவர்கள்தான் எல்லாமுமாக இருந்தார். அவர்களும் கட்சியினரை மதிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளும் இவருக்கு சீட் வழங்கினால் தோற்றுவிடுவோம், நாங்களும் அவருக்கு வேலை செய்ய மாட்டோம் என தலைமைக்குத் தெரிவித்தனர். அதேபோல் எம்.பி. தேர்தலின்போதும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்போதும் இஸ்லாமியர்கள் போராடியபோது, பாஜகவை விமர்சித்திருந்தார். இதுவெல்லாம் சேர்ந்து அவருக்கு சீட் இல்லாமல் செய்ய வைத்துவிட்டது என்கிறார்கள்.
அமைச்சருக்கு சீட் வழங்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள், நிலோபர் வீட்டு முன் குவிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். நாங்கள் ஓட்டளிக்க மாட்டோம் என சபதம் போட்டு பேசிவருகின்றனர். மீண்டும் அமைச்சருக்கு சீட் வழங்க வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.