திருச்சி, பஞ்சப்பூரில் ரூ 349.98 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் கட்டுமான பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பங்கேற்றார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பஞ்சப்பூரில் அமையும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் மொத்த மதிப்பீடு 349.98 கோடி. கட்டுமான பணிகள் ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருச்சி அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை உயர் மட்ட பாலம் ரூ 966 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் சாலை அமைக்கும் பணிகள் மழையால் சில இடங்களில் தாமதப்படுகிறது. ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி, எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதனை அதிமுகவினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதன் வாயிலாக சாயம் போகாத கட்சி திமுக என்பதை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மழைக்காலங்களில் திமுகவின் சாயம் வெளுக்கிறது என்று ஜெயக்குமார் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பேசினார்.