Skip to main content

“இ.பி.எஸ்.க்கு திராவிட மாடல் ஆட்சி மீது குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை” - அமைச்சர் கே.என். நேரு தாக்கு!

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
Minister KN Nehru says EPS has no right to complain about the Dravidian model govt

505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என புள்ளிவிவரத்தோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னவுடன் பதட்டமடைந்த பழனிசாமி ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்கிறார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கே.என். நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய, ‘20% தேர்தல் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை’ என்ற பொய் குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்து, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் எனச் சிவகங்கை விழாவில் புள்ளிவிவரத்தோடு பதில் அளித்து பழனிசாமியின் பொய் முகத்தை கிழித்தெறிந்தார்.

தமிழ்நாட்டு மக்கள் முன் பழனிசாமியின் பொய் அம்பலப்பட்டு விட்டதால் “ஆட்சிக்கு வரும் முன் புகார் பெட்டி வைத்து தி.மு.க பெற்ற மனுக்கள் நிலை என்னவென்று தெரியவில்லை’’ என புதிய பொய்யை இன்று சொல்லியிருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற நூறு நாட்களில் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். அதேபோன்று 07.05.2021இல் தாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித்துறையையே உருவாக்கி உத்தரவிட்டார். கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்திலும், அனைத்து மனுக்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு 100 நாட்கள் முடிவில் 2.29 இலட்சம் மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்ந்தன.

பல்லாண்டுகளாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல குறைகள் குறுகிய காலத்தில் தீர்த்து வைக்கப்பட்டன. இவை எல்லாம் தெரியாதது போல நடிக்கும் பழனிசாமி இன்று புகார் பெட்டியில் பெறப்பட்ட மனுக்கள் என்னானது என பொய் பேச கிளம்பிவிட்டார். ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார். ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ என்பது பழனிசாமிக்குத்தான் கட்சிதமாக பொருந்தும். ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ‘முதல்வரின் முகவரி’ துறை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வுகள் நடத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க கள ஆய்வினை நடத்தி மக்களை சந்தித்தும் வருகிறார்.

இதெல்லாம் தெரியாமல் பழனிசாமி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசியிருக்கிறார். தூத்துக்குடி மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்க கூட மனமின்றி கருணையில்லாமல் 13 அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்ற அலங்கோல ஆட்சிநடத்திய பழனிசாமிக்கு திராவிட மாடல் ஆட்சி மீது குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை. ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’ என்ற வழியில் மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம் போன்ற முக்கியமான தேர்தல் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் சொல்லாத புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களையும் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு  நிறைவேற்றி உள்ளது.

Minister KN Nehru says EPS has no right to complain about the Dravidian model govt

தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் ஆட்சிக்கு வந்தபின் காற்றில் பறக்கவிடுவதையே வாடிக்கையாக கொண்ட அதிமுகவிற்கும் பழனிசாமிக்கும், சொன்னதை செய்வதோடு சொல்லாததையும் செய்து முடிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். அந்த வயிற்றெரிச்சல் பொறுக்காமல் தான் இப்படி அதிமுகவினர் வெட்டி ஒட்டி திரித்து பரப்பும் வீடியோக்களை பார்த்து அற்ப சந்தோஷம் அடைந்து அதை அப்படியே உளறி தனது வயிற்றெரிச்சலை தணிக்க நினைக்கிறார். பழனிசாமியின் இந்த பச்சை பொய்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். மக்கள் நலனுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் நல்லாட்சி மீதும் அவதூறு பரப்ப அதிமுக போடும் கணக்குகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தவிடுபொடியாக்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்