திருவாரூரில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக பெறக்கூடிய வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை உண்டாக்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சரான காமராஜ் பேசியது பலரையும் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.
திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமையேற்ற அமைச்சர் காமராஜர், தொண்டர்கள் மத்தியில் பேசினார்,’’ அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய இயக்கம். பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிகண்டு பீடுநடைபோட்டு சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு வந்த சோதனைகள், இந்திய துணைக்கண்டத்தில் எந்தக் கட்சிக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. அதேபோல், வெற்றி என்கிற ரீதியில் தமிழகத்தில் அதிக முறை ஆட்சிக்கு வந்த கட்சியும் அதிமுக மட்டுமே. இதுதொண்டர்களால் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என சில துரோகிகளும், எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என சில விரோதிகளும் நினைக்கின்றனர். துரோகமும், விரோதமும் என்றைக்கும் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு நடைபெறக்கூடிய ஆட்சி, ஜெயலலிதாவின் திட்டங்களையெல்லாம் அப்படியே செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே இல்லை என்பதுதான் உண்மை. விலையில்லா அரிசி தந்து பசியைப் போக்கி இருக்கிறோம். கணினி, மிதி வண்டி உள்ளிட்ட பொருள்கள் தந்து தமிழகத்தில் கல்வியை வளர்த்துள்ளோம். திருமண உதவித் திட்டத்துக்கு 8 கிராம் தாலி, ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை என பல திட்டங்களை இன்றைக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால், கிராமப்புற வளர்ச்சி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி உயர்ந்திருக்கிறது. கல்வித்தரம் கூடியிருக்கிறது. இந்த திட்டங்களையெல்லாம் எடுத்துக்கூறி நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இன்றைக்கு மக்களுக்கான விலையில்லா திட்டங்கள் எல்லாம் கூடாது என்றும் அதை கொச்சை படுத்தியும் சிலர் கூறுகின்றனர். பணத்துக்காக நடிப்பவர்களும், பணம் சம்பாதிக்க தொழில்நடத்துபவர்களும் இந்த விலையில்லாதிட்டங்கள் பற்றி பேச தகுதி கிடையாது. மக்கள்தான் இதற்கான முடிவை எடுக்கவேண்டும். நாங்கள் தன்னிறைவு பெற்றுவிட்டோம்; விலையில்லா திட்டங்களையெல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் என்றைக்கு சொல்கிறார்களோ அதுவரை இந்த திட்டங்கள் தொடரும்.
நடைபெறக்கூடிய 20 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வெற்றியின் முகவரியாக, திருவாரூர் வெற்றியை அமைத்துக் காட்டுவோம். அரசியலைப் பொறுத்தவரை நம்முடைய வாழ்நாள் எதிரி திமுக. எனவே, திமுகவை தோற்கடிக்க வேண்டியது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெறக்கூடிய வெற்றி, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவும் இது அமையும்’’ என்று பேசி முடித்தார் அமைச்சர் காமராஜ்.