முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (05.08.2023) நடைபெறும். இந்தக் கூட்டம் காலை 10.30 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.