நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எனப் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதோடு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
அதே சமயம் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.
இத்தகைய சூழலில் தான் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இது தொடர்பாக பிறக்கப்பட்ட அறிவிப்பில் தமிழக அரசு சார்பில் யாரும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறதா? அல்லது புறக்கணிப்பு செய்கிறதா? என எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறக்கணித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.