Skip to main content

“7ஆவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்  நம்பிக்கை!

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
DMK will form the govt for the 7th time CM MK Stalin faith

ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்குமான ஆட்சியைப் பாகுபாடின்றி வழங்கி வரும் திராவிட மாடல் எனும் மக்கள் அரசின் மீது தமிழ்நாடு எந்தளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட 'இரும்பின் தொன்மை' என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்பாட்டைக் கொண்ட தமிழ்நிலத்தில் மதுரை மாநகர் என்பது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரியது. வைகை ஆற்று நாகரிகத்தின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாக விளங்கி வருகிறது இன்றைய மதுரை.

அந்த மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி எனும் பழம்பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல்லுயிர்ச் சூழல் கொண்ட பகுதியில் டங்ஸ்டன் என்கின்ற கனிமத்தை எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, அதனைத் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திராவிட முன்னேற்றக் கழகம். டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்ட விதிகளைத் திருத்தி ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டிய போது, அதற்கும் கண்டனம் தெரிவித்துச் செயல்பட்டது திராவிட மாடல் அரசு. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஏலம் விட்டு, தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடாது என்று மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்கள் கிராமசபைக் கூட்டங்களில் கருத்துகளைத் தெரிவித்தபோது, "உங்களுக்கு என்றும் துணையாக இருப்போம்" என்று அவர்களுக்கு உறுதி அளித்தவர் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

மதுரை மக்களின் மனநிலையை உடனுக்குடன் அவர் எனக்குத் தெரிவித்து வந்தார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா காட்டிய வழியில் செயல்படுகின்ற திராவிட மாடல் அரசு மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை நாடாளுமன்ற விவாதங்களில் உறுதியான குரலில் எதிரொலித்தனர். சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானத்தை உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்னெடுத்து, மக்களின் குரலாக ஒலித்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமின்றி நம் தோழமைக் கட்சியினர், மாற்றுக் கட்சியினர் ஆகியோருடன் எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆதரிக்கின்ற அளவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

DMK will form the govt for the 7th time CM MK Stalin faith

மதுரை மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு எதிராக நடத்திய மாபெரும் மக்கள் பேரணியை சிறு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில்,  அழுத்தமான வகையில், அறவழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருந்தது. இந்தப் பேரணி நடைபெற்றபோது அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு மக்களின் உணர்வையும், அவர்களின் கட்டுப்பாட்டையும் விளக்கிக் கொண்டே இருந்தார். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மூர்த்தியின் வழியாக என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்களுடைய பாராட்டுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்தனர். இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்பதால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான உங்களில் ஒருவனாக நான் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று மறுநாளே குடியரசு நாளான ஜனவரி 26 அன்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியமே மதுரைக்கு புறப்பட்டேன். அரிட்டாபட்டியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாபெரும் வரவேற்பு அளித்தனர். பாராட்டுகளைக் குவித்தனர். அவர்களிடம் உரையாற்றிய நான், இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

DMK will form the govt for the 7th time CM MK Stalin faith

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தன்னுடைய கருத்தை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழ்நாட்டின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதனை முழு மனதுடன் வரவேற்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அரிட்டாபட்டி போலவே அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக வல்லாளப்பட்டியில் திரண்டு இருந்தனர். அவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், உங்களுக்கு என்றும் இந்த அரசு துணையாக இருக்கும் என்பதை தெரிவித்து, மக்கள் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்கினேன். அவர்களின் வாழ்த்து முழக்கங்களும் ஆரவாரமும் இந்த அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

வல்லாளப்பட்டியில் திமுக தொண்டர் ஒருவர் என்னிடம் ஒரு தாளைக் கொடுத்தார். அதனைப் படித்துப் பார்த்த பொழுது மிகவும் மனம் நெகிழ்ந்தேன். அதில், “டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யக்கோரி மக்களின் மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக நமது ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில், நமது பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பு : கடந்த 1984ல் இதே இடத்தில் டாக்டர் கலைஞர் உரையாற்றினார். 41 வருடங்களுக்குப் பிறகு தற்போது எங்களது ஊரில் தாங்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. திமுக தொண்டரின் அந்த உணர்ச்சிமிகு சொற்களில் நான் என்னை மறந்தேன். இதுதான் தி.மு.க. என்கின்ற மக்கள் இயக்கம். எத்தனை ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் மக்களின் உரிமைக்காக இன்றும் துணை நிற்கின்ற மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மதுரை மக்களுக்காக அதனை அமைச்சர் மூர்த்தி முன்னெடுத்துச் சிறப்பாகச் செயல்படுத்தி, திராவிட மாடல் அரசின் வெற்றிக்கு துணை நின்று இருக்கிறார்.

DMK will form the govt for the 7th time CM MK Stalin faith

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி,  திமுக தொண்டர்களான உங்களையும் சந்தித்து மகிழ்வேன். ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்