சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 12-ந்தி ஆனி திருமஞ்சன தேர் மற்றும் திருவிழாவுக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் சாமிகள் புறப்பாடு,சிறப்பு பூஜைகள் என தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான 20-ந்தேதி தேர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலவரான நடராஜர், சிவாகாம சுந்தரி அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வலம்வந்தது. மாலை கோயிலின் அருகே தேர் நிலைக்கு வந்தது. அதனை தொடர்ந்து தீட்சிதர்கள் தேரில் உள்ள சாமி சிலைகளை மேளதாளம் முழங்க இறக்கி கோயிலின் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து இரவு லர்ச்சாசணை பூஜைகளை செய்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 3 மணிக்கு மேல் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடராஜர் மற்றும் சிவாகமசுந்தரி சிலைகளை தீட்சிதர்கள் தோலில் தூக்கிகொண்டு மேளதாள முழக்கத்துடன் நடனம் ஆடியவாறு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து கருவறை நோக்கி வந்தனர். இந்த தரிசன விழாவை பல ஆயிரகணக்கான மக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை 100 அடி தூரத்தில் இருந்து செய்தி சேகரித்துகொண்டு இருந்த செய்தியாளர்களை படம் எடுக்காதீர்கள் என்று சில தீட்சிதர்கள் வாழைகாயை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் சிலர் உடல் அசைவுகள் மூலம் மிரட்டும் தோனியில் நடந்து கொண்டனர். இதனை கண்ட பக்தர்களும்,செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயிலுக்கு செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிதம்பரம் நகர காவல்ஆய்வாளர் குமார் மற்றும் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனிடம் 15-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சந்தித்து மனுகொடுத்தனர். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறினார்கள். இதுகுறித்து தீட்சிதர்களிடம் அவர்களும் நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதையெல்லாம் ஒருபொருட்டாக கருதாமல் சில தீட்சிதர்கள் நடந்து கொண்டது அனைவரின் முகம் சுளிக்கும் வண்ணமாக இருந்தது.