Skip to main content

“மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயமா? திணிப்பைக் கைவிட வேண்டும்” - அன்புமணி! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

“Is Hindi compulsory in central government offices? Drop the dump ”- Anbumani!

 

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் இந்திய அலுவல் மொழியாக்கியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான  இந்தித் திணிப்பு தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை; இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது.


புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்டுள்ள ஏப்ரல் 29-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை தான் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சைகளை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது. “இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவிடம் அளிக்கப்பட்ட ஏழாவது உறுதிமொழியின் அடிப்படையில் ஜிப்மர் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகள் ஆகியவற்றின் பொருள்களும், பத்தி தலைப்புகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தன. எதிர்காலத்தில் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகளின் குறிப்புகளும் முடிந்தவரை இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும்” என்று ஜிப்மரின் அனைத்துத் துறைகளுக்கும் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


ஜிப்மர் மருத்துவ நிறுவனம் மட்டுமின்றி, பெரும்பான்மையான மத்திய அரசு அலுவலகங்களிலும் இதே போன்ற உறுதிமொழி இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவினால் பெறப்பட்டிருப்பதாகவும், அதன்படி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இப்போதும் இந்தி கட்டாயப் பயன்பாட்டில் தான் உள்ளது. அத்துடன் கூடுதலாக ஆங்கிலத்திலும் எழுதும் வழக்கமும் உள்ளது. இந்தியுடன் கூடுதலாக ஆங்கிலத்திலும் விவரங்களை எழுதுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தான், எதிர்காலங்களில் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களும், துறைகளும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் மத்திய அரசு அலுவலகங்களில் அனுமதிக்க முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு மட்டுமின்றி, இந்திய அலுவல் மொழி சட்டத் திருத்தத்திற்கும் எதிரான செயல் ஆகும்.


இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி காலம் காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 1959-ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்த அப்போதைய பிரதமர் நேரு, “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும்” என உறுதியளித்தார். 1968-ஆம் ஆண்டின் இந்திய அலுவல் மொழிகள் சட்டத் திருத்தத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-ன்படியும் மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள  உரிமையை ஒரு சாதாரண உறுதிமொழியின் மூலம் பறிக்க முயல்வது சரியல்ல; அதை ஏற்க முடியாது.


2014-ஆம் ஆண்டிலும் இதே போன்ற இந்தித் திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிப் பிரிவு இயக்குநர் அவதேஷ் குமார் மிஸ்ரா 27.05.2014 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அந்த சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆனால், இப்போது ஜிப்மர் நிறுவனமும், வேறு பல மத்திய அரசு நிறுவனங்களும்  வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள், 8 ஆண்டுகளுக்கு முன் வெளியான சுற்றறிக்கையை விட மிகவும்  தீவிரமாகவும், அப்பட்டமாகவும் இந்தியை திணிப்பதாக அமைந்துள்ளன. இது இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்; இதை அரசு தவிர்க்க வேண்டும்.


ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும்  இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் இப்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்