கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதனையடுத்து ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நிதி வழங்கியிருக்கிறார்கள், ஆனால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எதிர்பார்த்த அளவு பணம் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது பற்றி விசாரித்த போது, கரோனா நிவாரண ஃபண்டுக்கு. அரசுத் துறைகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. இதனால், ஆளும் தரப்பு அப்செட்டாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் அமைச்சர்களும் அக்கறை காட்டாத நிலையில், துறை செயலர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர் பனீந்தர் ரெட்டி, தங்கள் துறை சார்பில் 10 கோடி ரூபாய் வரை தருவதாக உறுதியளித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் பிரபல கோவில்கள் ஒவ்வொன்றும் 30 லட்சத்துக்கும் குறைவில்லாமல் நிவாரண நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். இதனால் அறநிலையத் துறையின் வேகத்தைப் பார்த்து, மற்ற துறை செயலாளர்களும் நிதி திரட்டுவதில் விறுவிறுப்பாகக் களமிறங்கி இருக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.