ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு திங்கள்கிழமை 31 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது நல்ல செய்தி என்று சட்டசபையில் முதல்வர் குறிப்பிட்டார். அதுபோல இன்பதுரை சட்டசபையில் பேசுகையில், நதி போல ஆரவாரமில்லாமல் முதல்வர் இந்த சாதனையை செய்திருக்கிறார் என்று சொல்லியுள்ளார் என்று கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தினகரன், முதல் அமைச்சருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் இதில் என்ன சம்மந்தம் இருக்கிறது. உச்சநீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை கொடுத்துள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மத்திய அரசு காலம் தாழ்த்தியபோது அமைதியாக இருந்த தமிழக அரசாங்கம் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு ஆணையத்தை அமைத்து, ஆணையக் கூட்டத்தை கூட்டி தண்ணீர் திறந்துவிடச் சொன்னால் இதனை இங்குள்ளவர்கள் தங்களது வெற்றி என்று கூறுவதெல்லாம் கேலிக்கூத்து என்று காவிரி டெல்டா மக்களுக்கு நன்றாக தெரியும்.
சட்டசபையில் தேவையில்லாமல் நூறு பேர் உட்கார்ந்து கொண்டு மேஜையை தட்டிக்கொண்டு மேஜையை உடைக்கிறார்கள். மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. எதிர்க்கட்சிகள் ஏதாவது பேசவேண்டும் என்று கேட்டால், அதிலும் குறிப்பாக உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டும்போது உங்களை சொல்லவில்லை என்று கூறி அதற்கு பதிலளிக்க அனுமதி மறுக்கும் சட்டசபைதான் இங்கு நடக்கிறது என்றார்.