'அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும்' என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேடையில் பேசுகையில், ''நாளுக்கு நாள் அரசு கல்விக்கூடங்கள் கீழே சென்று கொண்டிருக்கிறது. சிஎஸ்ஐ அறிக்கையில் 73% உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கின்றனர். 27 சதவீதம் மாணவர்கள் மட்டும்தான் அரசுப் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வானவில் திட்டத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி நேற்று பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ''ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும் என்ற கருத்தை நான் கொண்டுள்ளேன். ஆளுநரும் மாணவராக இருந்து வந்தவர் தான். ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் என்ற அவரது கருத்து வேதனை அளிக்கிறது'' எனத் தெரிவித்தார்.