Skip to main content

தாய் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

admk leader and tamilnadu cm edappadi palaniswami election campaign at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குப்பனை ஆதரித்து வடிவுடையம்மன் கோயில் அருகே அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "அ.தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என பொதுமக்கள் உறுதியாக உள்ளனர். கரோனா காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேருக்கு உணவளித்த அரசு அ.தி.மு.க. அரசுதான். கரோனா பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடியே, தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

 

பெண்கள், தாய்மார்கள் பற்றி யார் இழிவாகப் பேசினாலும் நிச்சயம் ஆண்டவன் தண்டனை தருவார். எனக்காக பேசவில்லை, தாய்மார்கள் பற்றி இழிவுபடுத்திப் பேசியவர்களுக்கு தக்க தண்டனை வழங்குகள். ஏழைத் தாயாக இருந்தாலும், பணக்கார தாயாக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம். என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார். என் தாயையே இழிவுபடுத்திப் பேசியுள்ளார்; நாளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்? ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப் போல் வளர்ந்தவன் நான். ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுகளை வாங்க வேண்டியிருக்கிறது. 

 

தி.மு.க.வில் தொண்டர் முதல்வராக முடியும் என ஒரு கூட்டத்திலாவது ஸ்டாலினால் கூற முடியுமா? தி.மு.க.வில் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் பதவிக்கும், அதிகாரத்திற்கும் வர முடியும். தொண்டை சரியில்லை என்றாலும் தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பரப்புரை மேற்கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் கூறினார். 

 

தன் தாயைப் பற்றி குறிப்பிடும் போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்தக் குரலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்