"எதிர்க்கட்சியை திட்டித்தான் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றிய திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் தவளவீரன்பட்டியில் ஒன்றிய செயலாளர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியபோது, “கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் நம் ஒவ்வொருவர் தலையிலும் கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அந்த நிதி பற்றாக்குறையை சரி செய்யும் பணியோடு அதே நேரத்தில் நிதி பற்றாக்குறை இருந்தாலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். எதிர்க்கட்சியை திட்டித்தான் நாம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்து இருக்கின்றாரோ அதனை சொன்னாலே போதும். அதிகப்படியான வாக்குகளை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நாம் ஒவ்வொருவரும் முதலமைச்சரின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் நமது முதல்வர். அதனால்தான் தேர்தல் என்று வரும்போது அனைவரையும் படிப்படியாக செதுக்கிக் கொண்டு செல்கின்றார். நமது இயக்கத்தை சேர்ந்துள்ள நமது கட்சிக்காரர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து தருவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் தமிழக முதல்வர் அறிவுறுத்தி வருகின்றார்.
அறிவாலயம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் அறிவாலயம் பக்கமே வராமல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க என்று சொல்லக்கூடிய ஏழைத் தொண்டன் இருந்து கொண்டுதான் இருக்கின்றான். அவனது தேவையை நிறைவேற்றுமாறு உத்தரவையும் வழங்கியுள்ளார். அதனை படிப்படியாக செய்து கொண்டுதான் இருக்கிறோம். உங்களது உழைப்பிற்கான நன்றிக்கடனை செலுத்த தயாராக உள்ளோம்” என்றார். கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன் மற்றும் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.