ரஜினியின் அரசியல் குறித்து திமுக, அதிமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்பினால், ஜனநாயகத்தில் கட்சித் துவங்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வருவதை அவர் அறிவிக்கட்டும். அப்போது பார்க்கலாம் என்கிற ரீதியிலேயே பதில் அளித்தனர். அரசியல் வருகையை அவர் உறுதிசெய்துவிட்ட பிறகு அதே கேள்வியை அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது, கட்சியை அவர் துவங்கட்டும். அதன் பிறகு பதில் சொல்கிறோம் என்று நழுவி விடுகின்றனர்.
இந்த நிலையில், நேரடி அரசியலில் அவர் இறங்கும் போது, ரஜினியை நேரடியாக விமர்சிக்க திமுக, அதிமுக கட்சித் தலைமைகள் முன் வருமா? என்கிற கேள்விகள் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளிடம் எதிரொலிக்கவே செய்கிறது.
இது குறித்து இரு கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணியினரிடம் நாம் விசாரித்த போது, எங்களுக்குத் தெரிந்தவரை ரஜினியைக் கடுமையாக விமர்சிக்க, எங்களின் தலைவர்கள் முன் வரமாட்டார்கள். திமுகவையும் அதிமுகவையும் பற்றி ரஜினி விமர்சித்தால் கூட, அதற்கு தாங்கள் பதில் சொல்வதை தவிர்த்து, இரண்டாம் நிலை தலைவர்களை வைத்தே பதிலடி தருவார்கள். அதேசமயம், தகவல் தொழில் நுட்ப அணியினராகிய எங்கள் மூலம் ரஜினியின் இமேஜை குறைக்கும் வகையில் மீம்ஸ் போட வலியுறுத்துவார்கள். இப்போது அதுதான் நடந்து வருகிறது என்று விவரிக்கிறார்கள்.
தமிழக அரசியலின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைமைகளின் நிலை இப்படிப்பட்டதாக இருக்கும் நிலையில், ரஜினியை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் ஒரே நபர், நாம் தமிழர் சீமான் மட்டுமே! இப்போதே அந்தப் பணியைத் துவக்கிவிட்டார். தேர்தல் களத்தில் இன்னும் அதிகமாக விமர்சிப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.