விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாமகவை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார்.
அடுத்து 2011ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தோல்வியையே சந்தித்ததாலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் கட்சி மாறிச் சென்றதாலும், விஜயகாந்த் உடல்நிலை காரணமாகவும் தேமுதிக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால் கட்சி மேலும் வலுவடைய தேமுதிக கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்றும், வெற்றி பெறும் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்றும் தகுதியான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்றும் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சென்னையைத் தாண்டி வேறு எந்த மாவட்டத்திலும் விஜயகாந்த் போட்டியிட வேண்டாம். அவர் பிரச்சாரத்திற்கு வந்து செல்ல ஏதுவாக இருக்காது. ஆகையால் அவர் இருக்கும் விருகம்பாக்கம் தொகுதியிலேயே வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அப்போதுதான் அவர் பிரச்சாரத்திற்கு வருவதும் எளிமையாக இருக்கும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான பணிகளைத் தொண்டர்கள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர் அக்கட்சியினர்.