திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தில் தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ. 2000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டார். அப்போது திடீரென மழை பெய்தது. இருந்தபோதிலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 முதல் தவணையாக வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மாதத்தில் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை வருமா என கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் மாதம் 30 நாட்களும் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற ஜூன் மாதம் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். தமிழகத்தில் 2 கோடியே 7 இலட்சம் அரிசி குடும்ப அட்டைக்கு நிவாரணம் வழங்கப்படும்” என கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.