அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து இனிமேல் அவரது கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலையைப் பற்றி ஏன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படிப் பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நீங்கள் அவரைப் பற்றி பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது தெரியும். அவர் பேட்டி கொடுத்து பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து அவரது கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்.
கட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக்கேட்டால் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்கிறார். நீங்கள் 10 கேள்விகள் கேட்கிறீர்கள். இதற்கு எங்களைப் போல் உள்ள தலைவர்கள் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். தயவு செய்து இனிமேல் கேட்க வேண்டாம். முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்.
சட்டமன்றத்தில் நான் பேசுவதை ஏன் ஒளிபரப்பு செய்ய மாட்டேன் என்கிறார்கள். நான் பேசுவதை ஒளிபரப்பு செய்தால் அவரது சொத்து குறைந்துவிடுமா?. அரசாங்கத்தின் சொத்து அனைவருக்கும் பொதுவானது. சட்டமன்றம் பொதுவானது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பார்க்க முடியாது. முதல்வர் பேசுவதை மட்டும் வரிக்கு வரி காட்டுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை ஏன் காட்டமாட்டேன் என்கிறார்கள். நாட்டு மக்களின் பிரச்சனைகளை நாங்கள் எடுத்து வைக்கிறோம். சட்டமன்றத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? அதை ஏன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்” எனக் கூறினார்.