தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது.
மேலும், ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நடக்கவிருப்பதால் அதனை சந்திப்பதிலும் மாயாவதியும் பவன்கல்யாணும் கைக்கோர்த்துள்ளனர். இதற்கான அறிவிப்பு லக்னோவில் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை எதிர்த்து அரசியல் செய்து வரும் பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆந்திர பத்திரிகைகளும் இதைத்தான் பிரதிபலித்தன. இந்த நிலையில், திடீரென பாஜகவை பவன் கல்யாண் விமர்சித்தை அடுத்து தனித்து களமிறங்குவார் என ஆறுடம் சொன்னார்கள். ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி திடீரென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாணிண் இந்த முடிவை அதிர்ச்சியுடன் உற்று நோக்குகின்றன தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் !
பவன்கல்யாணுடன் கூட்டணியை உறுதிசெய்து பேசிய மாயாவதி, "ஆந்திர மாநில மக்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் புதியவர்கள் அமர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்பாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இது தான் வெற்றிக் கூட்டணி " என்றார்.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். மாயாவதி பேசுகையில், "ஆந்திர மாநில முதல்வராக நீங்கள் வர வேண்டும் " என்று பவன் கல்யாணை பார்த்து கூற, அவரோ, " இந்தியாவின் பிரதமராக நீங்கள் வர வேண்டும். அது தான் என் விருப்பம் " என மாயவதியை பார்த்து கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த பவன் கல்யாண், நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என மாயாவதியிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் அதிகாரத்திற்கு வர வேண்டும் என சொல்வது இரு கட்சி தொண்டர்களிடமும் உற்சாகத்தை தந்துள்ளது!
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், முதல் பிரச்சாரக்கூட்டத்தை கன்னியாகுமரியில் துவக்கிய ராகுல்காந்தி, " தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் " என தெரிவித்தார். அதேபோல, " இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் " என தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். அதே பாணியில் இப்போது மாயாவதியும் பவன் கல்யாணும் தங்களது விருப்பத்தை எதிரொலித்திருக்கிறார்கள்!