தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்த தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன். பா.ஜ.க. எனக்குப் பணம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்; ஆனால் நான் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிடுகிறேன். ஏழைகளின் மீது எனக்குக் கோபம் இல்லை; ஏழ்மையின் மீதுதான் கோபம் வருகிறது. நேர்மையை நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது அவர்களுக்கு குமட்டலாக உள்ளது. காமராஜர், அப்துல்கலாமை போன்று வர வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்" என்றார்.