ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் சேரப் போறார்ங்கிற அதிரடிச் செய்தியும், அதற்கு அவரிடமிருந்து பதட்டமான மறுப்புச் செய்தியும் மாறி மாறி சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்.சை வச்சி இப்படியொரு சர்ச்சை சுழன்றடிக்க காரணம், காவி மயமான அவரோட வாரணாசி விசிட்தான். அங்கே போட்டியிடும் மோடியோட, வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. சார்பில் ஓ.பி. எஸ்.ஸுக்கு மட்டும் தான் பா.ஜ.க. தரப்பிலிருந்து அழைப்பு வந்தது. இது மோடியோட விருப்பமாம். இதைத் தொடர்ந்து அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோரிடமிருந்து ஓ.பி.எஸ்.சுக்கு அழைப்பு வந்தது.
உடனே உற்சாகமாகத் தன் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் ரவீந்திரநாத் ஆகியோருடன் காசிக்கு -அதாவது வாரணாசிக்கு கிளம்பிட்டாரு. இது எடப்பாடிக்கு தெரிஞ்சதும் ரொம்ப அப்செட் ஆயிட்டாருனு அதிமுகவில் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவின்றனர். அதனால, மோடியின் நாமினேஷனுக்கு தன்னோட சார்பில் அமைச்சர் வேலுமணியையும் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பி துரையையும் அங்கே அனுப்பிவைத்தார் எடப்பாடி. ஓ.பி.எஸ். அங்க தங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அம்பானி தரப்பு கவனித்து கொண்டனர்.
ஓ.பி.எஸ்ஸோ., வாரணாசியில் இருக்கும் அனுமன்காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தன் மூதாதையருக்கு திதி கொடுத்தார். தமிழக புரோகிதரான கணேச கனபாடிகள், வேத மந்திரங்களை ஓத அப்போது உத்திராட்சம் அணிந்து, காவிகட்டிய கோலத்தில் ஓ.பி.எஸ். பிண்ட தானம் செய்து வழிபட்டார். இது முடிந்ததும் அதே காவி வேட்டியோடு அமித்ஷாவையும் அவர் சந்திச்சார். அதேபோல் பியூஷ் கோயலோடும் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புகளின்போது, மோடியின் கவனத்துக்குப் போற மாதிரி சில வேண்டுதல்களை ஓ.பி.எஸ். வைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.