2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய சீலிடப்பட்ட கடிதத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, "சட்டப்பேரவையின் மரபை மீறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டார். அவருடைய நடவடிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் எழுந்து சென்றுவிட்டார். அது ஒட்டுமொத்த தேச மக்களையும் இழிவுபடுத்தும் செயல். முதல்வரின் கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. அரசியலில் சில நெளிவு சுழிவுகள் உள்ளது. அதனால் கவனமாகத்தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும். ஆகையால், குடியரசுத் தலைவரின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசியகீதத்தை புறக்கணித்தது பற்றி எடுத்துரைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.