அதிமுக கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் ஏப். 20ம் தேதி, சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க். வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏன் பிரிந்து சென்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி மீது யாருக்கும் அதிருப்தி கிடையாது. தேர்தல் ஆணைய உத்தரவுக்குப் பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது.
பன்னீர்செல்வம் அணியினர் இனிமேல் அதிமுக கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தத் தகுதி இல்லை. மீறிப் பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காரியத்தை அவர்கள் செய்யமாட்டார்கள். இனி முட்டுக்கட்டையும் போட முடியாது. சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார்.” இவ்வாறு செம்மலை கூறினார்.