Skip to main content

எட்டா... பத்தா... கூட்டணி குறித்து தங்கமணி, பியுஸ் கோயல் பேச்சு வார்த்தை...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

admk bjp




அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று இரவு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களது ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்தது. இதில் அதிமுக சார்பாக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி மேலும் பிரபாகர் உள்ளிட்ட அக்கட்சியின் தேர்தல் கூட்டணி குழுவினர் கலந்துகொண்டனர்.
 

அதேபோல் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது, இருந்தாலும் பல்வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருகிறார்கள். இதனால் எங்களுக்கு 15 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வேண்டும் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தங்கமணி 15 தொகுதிகள் என்ன 20 தொகுதிகள்கூட நாங்கள் கொடுக்கத் தயார், ஆனால் நமது கூட்டணி பலமான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றால் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆகவே பாஜகவுக்கு அதிகபட்சம் 8 தொகுதிகள் கொடுக்கலாம் இதுதான் எங்கள் கட்சியின் நிலைபாடு எனக் கூறியிருக்கிறார்.
 

அதற்கு பதில் கூறிய பொன். ராதாகிருஷ்ணன் 8 தொகுதிகள் சரியாக வராது 2 டிஜிட் என்ற அடிப்படையில் 10 தொகுதிகள், மேலும் பேசுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து பாஜக இதுவரை எங்கே 10 தொகுதிகளில் போட்டியிட்டது எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கொஞ்சம் கடுமையாக பேசிய பொன். ராதாகிருஷ்ணன் அப்படி எல்லாம் பேசக்கூடாது இப்போது நிலைமை வேறு. உங்கள் அரசாங்கம் எந்த நிலைமையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு மீண்டும் நிலைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் இன்னும் இரண்டு வருடம் அரசாங்கத்தை நடத்த வேண்டும். இது எல்லாம் நாம் நடத்துகிற இந்தக் கூட்டணியில்தான் உள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலுக்காக மட்டும் அல்ல, எதிர்கால அரசியல் போக்கையும் கவனித்து தான் நாம் செய்கிறோம். ஆகவே தொகுதிகளைப் பற்றி எண்ணிக்கையைப் பற்றி நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது என கூறியிருக்கிறார். 
 

அதற்கு அமைச்சர் தங்கமணி நீங்கள் கூறுவதெல்லாம் 100% உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் என்ன மாதிரியான பிரச்சாரங்களை செய்து வருகிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த நிலைமையில் நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீங்களும் உணர வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக கேட்கவில்லை, தமிழ்நாட்டின் மூலமாக இங்கு அதிகமான எம்பிக்களை தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் தலைமையிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிமுக சார்பில் இறுதியாக 8 என்றும், பாஜக சார்பில் இறுதியாக 10 என்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது... 

 

 

 

சார்ந்த செய்திகள்