Skip to main content

பட்ஜெட் கூட்டம்!  அமைச்சரவையில் முக்கிய முடிவு! 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020


     

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 4-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடந்தது. அமைச்சர்களும் முக்கிய துறைகளின் உயரதிகாரிகளும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 


         

நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல், புதிய திட்டங்கள் அறிவிப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தொழிற்நிறுவனங்களுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டன.  

           

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ‘’ பட்ஜெட் தாக்கல், அதன் மீதான விவாதங்கள், துறைவாரியான மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என அனைத்தும் தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதை முந்தைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு மரபாக வைத்திருந்தது. இதனால் பட்ஜெட் கூட்டம் சுமார் 45 நாட்களுக்கு அதிகமாகவே நடக்கும். ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதங்களை ஒரு வாரத்துக்குள் முடித்து விட்டு சட்டமன்றத்துக்கு இடைவெளி விட்டுவிடுவார். 


              

 

ஒரு மாதம் கழித்து மானியக்கோரிக்கைகள் நிறைவேற்ற மீண்டும் பேரவைக் கூடும். தனது உடல்நலம் கருதி இந்த முடிவை ஜெயலலிதா கையாண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி தலைமையிலான அரசும் இதே வழிமுறைகளை கையாண்டு வந்தது. பட்ஜெட் நிறைவேற்றத்தையும் மானியக்கோரிக்கைகளை தனியாகவும் நடத்தினர். 
 

இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டும் அதே பாணியில் நடக்கும் என கருதியிருந்தனர். ஆனால், பட்ஜெட் தாக்கல், மானியக் கோரிக்கைகள் அனைத்தையும் தொடர்ச்சியாக நடத்துவது எனவும், மார்ச்சுக்குள் இவைகள் அனைத்தையும் நடத்திடவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது ‘’ என்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்