''திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவச் சிலை சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மறைந்த வாழப்பாடி கூ. இராமமூர்த்தியால் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் காரணமாக தற்காலிகமாக அகற்றப்பட்ட அச்சிலை அமைக்கப்பட்ட பகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட சாமிநாதன் என்பவருக்கும், அவரது சகோதரர் மறைந்த ராஜா என்பவரின் புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு முன்விரோதம் காரணமாக மேற்குறிப்பிட்ட அவர்களின் இடத்திலிருந்த ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தனிப்பட்டவர்களின் விரோதம் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் மறைந்த ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையைப் புனரமைத்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ச.பிரபு தலைமையில் ராஜீவ்காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் புனரமைப்பு செய்து வைக்க வேண்டுமெனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி (19.1.2021) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.