‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் தேர்தல் முடிவுகள் கடந்துபோகும்.
அந்தவகையில், தமிழகத்தில் அல்ல தமிழர்கள் வாழும் எந்த பகுதியிலும், பா.ஜ.க.வின் தாமரை மலரவே முடியாது என்பதை அடித்துக் கூறியிருக்கிறது கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள்.
கர்நாடக மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே பா.ஜ.க. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையை பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பிற்கு அருகில் சென்றது. ஆனால், அந்த நிலை நீண்டநேரம் நீடிக்காமல், பா.ஜ.க. 104 தொகுதிகளோடு தனது வெற்றிக்கணக்கை முடித்துக் கொண்டது. தற்போது, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கோரியிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதிகள் பலவற்றில், பா.ஜ.க. வெற்றி பெறமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. காந்தி நகர், சி.வி.ராமன் நகர், சாந்தி நகர், புலிகேசி நகர், சர்வக்ஞா நகர், சிவாஜி நகர் என தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை வகுத்துள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் தமிழகம் மீதான தாக்குதல்களுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் தேர்தல் வழியாக அந்தக் குரல் ஒலித்திருக்கிறது.