மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆடியோ மூலம் அறிவுறுத்தி உள்ளார். அதில் அவர் பேசியதாவது; "சமீப காலமாக கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது, அதனால் நாம் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும், மேலும் பிரச்சாரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய ஆரோக்கியம் தான் நமக்கு அதிக முக்கியம் என்பதால் அதில் அதிக அக்கறையை செலுத்துங்கள். அதேசமயத்தில் நம்முடைய வேலையும் சரியாக நடக்க செய்யுங்கள்.
கோவை தெற்கு தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்பது அனைவரும் அறிந்தது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறேன். நமக்கு என்று தனி பத்திரிக்கையோ தொலைக்காட்சியோ கிடையாது. தொண்டர்களாகிய நீங்கள் தான் கட்சியின் பிரச்சார பீரங்கியாக விளங்குகிறீர்கள். 234 தொகுதிகளிலும் வேட்பாளர் நான் தான் என்று நினைத்து கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களை சுமந்து செல்லும் பல்லக்காக நான் இருக்க விரும்புகிறேன். அனைத்து கட்சி அலுவலக வாசல்களிலும் நான் எத்தனை மணிக்கு எங்கு பிரச்சாரம் செய்கிறேன் என்று அறிவிப்பை வையுங்கள். மேலும் நான் பேசும் அனைத்தும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது அதனை அலுவலக வாசலில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
நான் அனைத்து இடங்களுக்கு சென்று பேசும் விஷங்கள் ஒரு ஊருக்கானது அல்ல அனைத்து தமிழ்நாட்டிற்கானது. அதனால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று இவற்றை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும், முயற்சிக்குறிய பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும். ஊடகங்கள் இல்லா காலத்தில் காந்தி பேசியதே நாடெங்கும் ஒலித்தது. அவருடைய கொள்ளுப் பேரன் நான் பேசுவதும் தமிழகம் எங்கும் ஒலிக்க செய்ய வேண்டும். தமிழகத்துக்கு இது ஒரு சுதந்திர போர் தான், ஊழல்வாதிகளின் ஆட்சியில் இருந்து விடுப்படும் போர். அந்த போரில் உங்களுடைய பங்குகளும் இருக்க வேண்டும். இது நல்ல பலன் கொடுக்கும் என்று நம்புகிறேன். அதற்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் செயலில் இறங்க வேண்டும்" என்று அவர் பேசினார்.