புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாயில் தண்ணீர் வரத் தொடங்கியது முதல் அடுத்தடுத்து கால்வாய் கரை உடைப்பு, மதகு உடைப்பு என்று தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பழமயான பாலம் ஒன்று உடைந்து அமுங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்பை சந்திக்க உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடி கிழக்கு - மேற்பனைக்காட்டுக்கு இடையே கல்லணைக்கால்வாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டு 15 மணி நேரம் போராடி உடைப்பு சரி செய்யப்பட்டது. அடுத்து சில நாட்களில் மேற்பனைக்காடு வான்வழி தகவல் மையம் அருகே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் மதகு சுவர் உடைந்து மதகு தனியாக தொங்கியது. இவையெல்லாம் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் பல வருடங்களாக பழுதாகி தூண் உடைந்து காணப்பட்ட ஆயிங்குடி பாலம் திங்கள் கிழமை ஒருபக்கம் உடைந்து அமுங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உழவு பணிக்கு வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பால் பல கி.மீ. சுற்றி விவசாயகள் தங்கள் வயல்களுக்கு டிராக்டர் போன்ற வாகனங்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது.
பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) மெய்யநாதன், “இந்த பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறேன். ஆனால் நடடிக்கை எடுக்கவில்லை. இப்போது உடைந்து விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக புதிய பாலம் கட்ட நடவடக்கை எடுக்க வேண்டும்” என்றார்.