மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டிருக்கும் சட்டை இவருடையது அல்ல "என்பது ரஜினியின் திரைப்படமொன்றில் வரும் பிரபலமான வசனமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்காவைச் சார்ந்த எல்ராம்பட்டு கிராம தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை கதையும் இப்படித்தான் உள்ளது. 1994ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதை தொடந்து, அதன் ஒரு பகுதியாக எல்ராம்பட்டு கிராமத்தில் உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அந்த கிராமத்தில் வீடற்ற 130 ஏழை தாழ்த்தப்பட்ட குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க மேற்கண்ட கிராமத்திலுள்ள தரிசு இடத்தை ஆர்ஜிதம் செய்து அளந்து அத்து காட்டி பட்டாவும் வழங்கப்பட்டுவிட்டது.
பட்டா வழங்கப்பட்டு 26 ஆண்டுகளை கடந்த சூழலில் இன்றும் அரசாங்க வருவாய் கணக்கில் மேற்கண்ட வீட்டுமனைகள் உள்ள இடம் தரிசு நிலம் என்றே உள்ளது. காரணம் என்னவென்றால் குடிமனை பட்டா பெற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய குடி மனைகளை அரசின் வருவாய் கணக்கில் ஏற்றுவதற்கு நில அளவர், தனி வட்டாட்சியர் என்று துவங்கி எல்லோருக்கும் கப்பம் கட்டி இருந்தால் இவைகள் அரசாங்க வருவாய் கணக்கில் இருந்திருக்கும். ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படும் ஏழைகள் எங்கே போவார்கள்? எனவேதான் உரிய கவனிப்பு இல்லாததால் அரசாங்க அதிகாரிகள் எழைகளுக்கு கொடுத்த குடிமனைகளை உரிய வருவாய் கணக்கில் ஏற்றாமல் இன்றுவரை இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை துவக்க விழா பொதுக்கூட்டம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடைபெற்றபோது அந்த கிராமத்தில் வாழும் ஏழை தாழ்த்தப்பட்ட மக்களின் மேற்கண்ட கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த 130 ஏழை தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் (முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் அடங்குவர்) திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் திங்கள்கிழமை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
எங்கள் குடிமனைகளுக்கு உரிய வருவாய் கணக்கை அரசு பதிவேட்டில் ஏற்றி அடங்கல் வழங்க வேண்டும் இல்லையெனில் நாங்கள் எத்தனை நாட்கள் மாதங்கள் ஆனாலும் இவ்விடத்திலேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு காத்திருப்போம். உங்களிடம் இருந்து நியாயம் கிடைக்கிற வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் போராட்டம் அரசுத்துறை அதிகாரிகளை கதிகலங்கச் செய்து விட்டது. இப்போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கொளஞ்சி தலைமை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் கே.இராமசாமி, ஒன்றிய செயலாளர் கே.ரவி, நகரச் செயலாளர் பி.எச். கே.பசீர் அகமது, ஒன்றிய பொருளாளர் எஸ்.கோவிந்தன்மாவட்டக்குழு உறுப்பினர் ஜே.கே.கதிர்வேல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் எஸ்.விஜய் எனகம்யூனிஸ்ட்கட்சியின்முன்னணி படையே திரண்டு நின்று போராட்டத்தில் கோரிக்கைகளை முழக்கங்களாகவும் கண்டன உரைகளாகவும் நிகழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்குப் பிற்பகலில் அழைத்தனர். பேச்சுவார்த்தையில் வரும் 15 தினங்களுக்குள் 130 தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளையும் வருவாய் கணக்கில் ஏற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி நகரில் காத்திருப்புப் போராட்டம் கைக்குழந்தைகள், முதியோர், பெண்கள் என குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இணைந்து போராட்டத்தை துவங்குவது என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.