பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். கல்பாத்தி அகோரம் ஆகியோரது வீடுகள் வருமான வரித்துறையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
பிகில் படத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் எதிர்த்து வேகமாக விஜய் பேசியதால் விஜய்யை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையை நடத்தியது. அதன் தொடக்கமாக ஏ.ஜி.எஸ். கல்பாத்தி அகோரம் வீட்டிலும், பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அவர்கள் இருவர் வீட்டிலும் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் பிகில் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம், அதற்கு அன்புச் செழியன் செய்த பைனான்ஸ் ஆகியவை வருமான வரித்துறை அதிகாரிகளால் கேள்விக் கேட்கப்படுகிறது.
இந்த நிலையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தார் விஜய். அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அவரை அவரது கேரவேனில் வைத்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவரது வீட்டிலும் அவரது வருமானம் தொடர்பான ஆவணங்களை பார்ப்பதற்கு வருமான வரித்துறை தயாராகி வருகிறது.
இந்த நிலையில் அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவருடன் வியாபார ரீதியாக தொடர்பு வைத்திருந்த அதிமுக அமைச்சர்கள் பட்டியல் வருமான வரித்துறைக்கு கிடைத்திருக்கிறது. சசிகலா உறவினர்கள் தொடங்கி பல அதிமுக அமைச்சர்கள் வரை பைனான்ஸ் செய்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஒரு பக்கம் ரஜினிக்கு கிரீன் சர்டிபிக்கேட் தரும் வருமான வரித்துறை, இன்னொரு பக்கம் தமிழகத்தில் மற்றொரு மாஸ் ஹீரோவான விஜய்யை குறி வைத்து களமிறங்கியுள்ளது.
அன்புச்செழியன் வீட்டில் சோதனை செய்யப்போன வருமானவரித்துறைக்கு, அதிமுக அமைச்சர்களின் சினிமா பைனான்ஸ் விவகாரம் இலவச இணைப்பாக கிடைத்திருக்கிறது. இதனால் தமிழக அரசியலிலும், தமிழக திரைத்துறையிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.