பாளையை ஒட்டியுள்ள அதன் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி சிவந்திபட்டி. அடிப்படையிலிருந்து தற்போது வரையிலும் விவசாயத் தொழிலைக் கொண்ட கிராமம். இங்குள்ள விவசாய குடும்பமான சுப்பையா குடும்பம் சிவந்திபட்டி உட்பட சுற்றுப்பட்டுக் கிராமத்திலும் அறிமுகமானது. இவரது மனைவி தான் 86 வயதுடைய பெருமாத்தாள் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் இந்த மூதாட்டி பஞ்.தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பெண் வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
இந்தத் தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள் என்ற அளவிலான பெரியகுடும்பம் கணவர் காலமான பின்பும் விவசாயத் தொழிலைத் திறமையாகச் செய்து வந்திருக்கிறார் பெருமாத்தாள். இவரது மகன்களில் ஒருவரான தங்கப்பாண்டியன் தி.மு.க.வின் பாளை ஒன்றிய செயலாளர் அனைவரும் ஏகமாக சிவந்திபட்டியிலேயே குடியிருப்பவர்கள்.
இதன் பஞ்சாயத்துத் தலைவராகத் தங்கப்பாண்டியனின் மூத்த சகோதரர் இரண்டு முறையும் அடுத்துத் தங்கப்பாண்டியன் மூன்று முறையும் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் செய்தவர்கள் குறிப்பாகத் தங்கபாண்டியன் தன்னுடைய பதவிக் காலத்தில் ஊராட்சிப் பகுதிக்குத் தேவையான வீடு தோறும் குடிநீர் வசதி, கழிவுநீர் செல்லும் வாறுகால் சுகாதாரம், சாலை பேருந்து வசதி என அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததால் தலைவராகியிருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் சுமார் 2800 வாக்குகளைக் கொண்ட சிவந்திபட்டியின் தலைவர் பதவி பொது பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் இம்முறை இந்தக் குடும்பத்திலிருந்து 86 வயது மூதாட்டியும், தங்கபாண்டியனின் தாயாருமான பெருமாத்தாள் வேட்பாளராகியிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வராணி உமா இருவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 86 வயது என்றாலும் பெருமாத்தாள் இன்றளவும் தளர்ந்து விடவில்லை. ஆரம்பக்காலம் தொட்டே கால்நடையாகச் சென்று வயலில் வேலை செய்து விட்டு பொழுது அடங்க வீடு திரும்பும் பெருமாத்தாள் திடகார்த்தமாகவே இருக்கிறார். தனியாகவே விவசாயப் பணிகளைச் செய்கிறார். அதனால் இன்று வரை தெம்பும் ஆரோக்கியமுமாக இருக்கிறார்.
தன் குடும்பத்தாருடன் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டார். “எம் புள்ளைக பிரசிடெண்ட்டாயிருக்கும் போது ரோடு, பஸ்சு, குடிதண்ணி வசதி கொண்டாந்தாங்க. அதுமாதிரி நான் ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடுப்பேன்” என்று திடமாகப் பேசி வாக்கு சேகரித்தார். அனைவரும் தெரிந்த பழகியவர்கள், என்பதால் தினமும் காலை, மாலை எனச் சளைக்காமல் சென்று வாக்கு சேகரித்தார். விளைவு வெற்றி பெருமாத்தாளுக்குச் சாதகமாகியிருக்கிறது. 2160 வாக்குகள் பதிவானதில் பெருமாத்தாள் 1568 வாக்குகள் பெற்று வெற்றி பெற எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட்டை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக இதன் ஊராட்சிக்குட்பட்ட 342 வாக்குகளைக் கொண்ட பற்பநாதபுரம் கிராமத்தின் 310 வாக்குகள் பெருமாத்தாளுக்கு கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து பெருமாத்தாள் கூறுகையில், “எங்க ஊர்ல எல்லா சனங்களும் வித்தியாசமில்லாம உறவு முறைய வச்சுப் பழகுவோம்யா. ஒத்துமையா இருப்போம். இங்க உள்ள எல்லாக் குடும்பங்களுக்கும் நான் போய் வந்து பழகியிருக்கேன். என்னையத் தெரியாதவங்களே இல்ல. எம் புள்ளைக நம்ம ஊருக்கு என்ன செஞ்சாங்களோ அதப்போல ஒரு குறையுமில்லாம நான் செய்வேன்னு மக்க கிட்டச் சொல்லி வோட்டு கேட்டேன். என்னைய நம்பி வோட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிறுக்காக. அதுக்கு நா, விசுவாசமாயிருப்பேம்யா” என்கிறார் பெருமாத்தாள் தெம்பாக.