தமிழகத்தில் தற்போது மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் பூங்கோதை அளித்த பேட்டி,
“தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த காலத்திலேயே கிராமப் புறங்களிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இணையாக துணை சுகாதார நிலையங்களை, கிராமங்கள் தோறும் ஆரம்பித்தார். அதில் செவிலியர், மருந்தாளுனர் நிரந்தரப் பணியில் இருந்தனர்.
சிறு நோயான காய்ச்சல், வயிற்றுப் போக்கு காரணமாக வரும் நோயாளிகளுக்கு ஆரம்பக் கட்ட வழிவகை செய்து உடனே அவர்களை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைப்பார்கள். அப்படி கலைஞரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 'சப்-சென்டர்' எனப்படும் துணை சுகாதார நிலையத்தைத்தான் முலாம் பூசி தற்போது மினி கிளினிக் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மினி கிளினிக்கில் பகல் இரவு என இரண்டு டாக்டர்கள், செவிலியர்கள் மருந்தாளுனர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய சூழலோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு துணை சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. மேலும் மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம், தேர்வு எழுதிய டாக்டர்கள், எட்டு வருடமாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
நிலவரங்கள் இப்படியிருக்க, தற்போது துவங்கப்படும் மினி கிளினிக்குகளுக்குத் தேவையான டாக்டர்கள் செவிலியர்கள் மருந்தாளுனர்கள் எந்த வகையில் நிரப்பப்படுவர். மினி கிளினிக் எப்படிச் செயல்படும் என்பது கேள்விக்குறி. ஏனெனில், ஆரம்ப சுகாதார நிலைங்களிலேயே டாக்டர்கள் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை. அப்படியிருக்க மினி கிளினிக்குகளின் செயல்பாடுகள் சாத்தியப்படுமா என்பதுதான் என்னுடைய கேள்வி” என்றார் எம்.எல்.ஏ பூங்கோதை.