ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மாலை மூன்று மணி நிலவரப்படி 53.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளை காண்பிக்குமாறு அங்கு குவிந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முறைகேடாக 40க்கும் மேற்பட்ட கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே அங்கு வந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு நாம் தமிழர் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.