விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சின்ன வாடியூர் என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சின்ன வாடியூர் என்ற பகுதியில் ‘சக்தி’ என்ற பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (05.02.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த எட்டுக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. முன்னதாக இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஆலையில் உள்ளே ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த உடலை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர். வீரலட்சுமி, கஸ்தூரி, வைத்தீஸ்வரி, மாணிக்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.